05 January 2010

விவாகரத்து


என் கடல் பாதைகளில்
இல்லாத கலங்கரை நீ
என் புரியாத கவிதைகளில் தெரியாத
எழுத்து பிழை நீ
என் குருட்டு விழிகளில் ஜனிக்கின்ற
இருட்டு கனவுகள் நீ
என் விழிகள் சுமக்கின்ற
உப்பு தரளங்கள் நீ
என் வயல் நிலங்களில் நின்று போன
பருவ மழை நீ
என் கட்டிலில் காணாமல்போன
ஒற்றை தலையணை நீ
என் பாதைகளில் தேய்ந்து போன
காலடி தடயங்கள் நீ
என் விடியல்கள் மறந்து போன இதமான
முத்தங்கள் நீ
என் புது குங்கும கலயம் அறியாத
செந்நிறம் நீ
என் வாழ்வில் உன் பாதியை ரத்தாக்கிய
ஒற்றை கையொப்பம் நீ

மார்க்கண்டேயன்



வெண்மை நாணிய தண் மலர் ஒன்று
பாலனவனின் கையில் இருந்து
இமை சிறகுகள் விடை பெற்ற வினாடிக்குள்
செஞ்சூரிய வண்ணம் பூசி மண் கவிழ்ந்தது
காலனவனின் பாசக்கயிறு
எறிகணைகளாகியதால்
மலருக்கு புது நிற பதிப்பு
மலர் சுமந்த சின்னவன்
மார்க்கண்டேயனின் மறுபதிப்பு இல்லையே????
மண் கவிழ்ந்தான் மலரை போலவே
புன்னகை இழந்த புது சிவப்புடன்...