28 January 2010

சரணடைந்தேன்…


அற்றை வானின் ஒற்றை விடி வெள்ளியாய்
அவளை கண்டேன்...
கருக்கல் கலைக்கும் கதிர்களின் செல்ல சினத்தில்
அவளை கண்டேன்..
காலை துளியை சிதற விட்ட புல் நுனியின்
புத்துணர்ச்சியாய்
அவளை கண்டேன்...
தாமரை இதழில் ஒரு துளி கவிதையாய்
அவளை கண்டேன்...
ஏரோடும் இடமெல்லாம் தேரோடும் தேவதையாய்
அவளை கண்டேன்...
கார்வானம் சிந்திய தரளங்களும் சிலுசிலுத்த தென்றலும் தழுவ
கச்சை இழந்த பச்சை சேலையில்
அவளை கண்டேன்...
தமிழ் மகள் விழி முதல் மொழி வரை
ஐம்படையுடன் ஆட்சி செய்யும் ஓரரசியாய்
அவளை கண்டேன்...
வெண் சங்கதில் சங்கத்தமிழ் அழகாய்
அவளை கண்டேன்...
மண் மறந்த வான் மலையில்
துள்ளி விழும் நீர் வீழ்ச்சியாய் வெண்கூந்தலாள்
அவளை கண்டேன்...
தென்னங் குருத்தில் வண்டு கொண்ட போதையில்
அவளை கண்டேன்...
சின்ன தாவர தண்டில் தினவெடுத்து
உலகு காண வந்த ஓரிலையின் புது நரம்பில்
அவளை கண்டேன்...
மாலை செவ்வானில் மரகதமாய்
அவளை கண்டேன்..
ஆலகால அந்தபுரத்தில் ஆயிரம் தோழிகளுடன்
ஓர் மதியாய் வதனம் மலர்த்திய
அவளை கண்டேன்...
காணுமிடமெல்லாம் அழகியவளின் தொல்லை
தாளாது இல்லம் அடைந்தேன்..
எத்திசையிலும் இல்லாத அழகுடன் அழகி அவள்
என் மகவின் மழலை சிரிப்பில் விகசித்து நின்றாள்...
நாவிழந்து போன என்,
இரு விழிமடலும் சிறகாக, பறந்தது நெஞ்சம்
கொள்ளை கொள்ளும் அழகி, அவள் வசம்…
சரணடைந்தேன் சக்தியிழந்து…

25 January 2010

சீதனம்


தட்சிணை கொண்டு சொந்தம் தேடும் பேடிகளே!!!
காலம் தந்த வார்த்தை மடைகள் திறந்து
உமக்கொரு மடல்..
விதிகள் வரைமுறைகள் புரியாத சுழலில் நான்
காரணம் நீவிர்
கரை சேர்க்கும் முயற்சியில் தோற்ற தந்தை
மூன்றாவது மாரடைப்புடன் முக்தி கொண்டார்…
கடைசிவரை தான் சேமித்த பச்சை தாள்களை
பேடிகள் உமக்கு விட்டு விட்டு…
வெயிலில் கூட தொடராதடா உன் நிழல் உன் பின்
அத்தனை சுயமிழந்த சதிரடா நீ…
கண்ணாடியில் தெரியும் விம்பம் உனதல்லடா
ஒரு ஆண்மையில்லா அகதியினது…
உன் கண்ணில் ஒளியாகி
உன் கருத்தில் வார்த்தையாகி
உன் கனவில் நினைவாகி
உடன் வரும் பெண்மையின் மென்மையை விட
பெரும் வரம் ஏதடா உலகில்???
ஏன் உன் பேராண்மை கவசத்தை துறந்து
பிச்சைகாரனாகிறாய்????
விற்க பொருளிழந்த வாணிகனா நீ
உன்னையே விற்கிறாய்???
சந்தை மாடு அல்ல நீ விலை போக…
ஆடவன் நீயெனில் ஆண்மை பூண்..
உன்னவள் உனதாக நீ உடைமை கொள்..
பெரும் பணம் கொண்டவள் வாங்கிய நீயும்
தந்தை பிச்சைகாரனாகி ஏழைமகள் வாங்கிய நீயும்
அவள் உண்மை காதல் மட்டும் காண மாட்டீர் கடைசி வரை..
மின்சாரம் பாயும் மெல்லிய பூவடா பெண்கள்
அவள் கனவுக்கும் நினைவுக்கும் இடையில்
கசங்காமல் காதல் செய்..
பூமி கூட தேவலோகம் ஆகும் உனக்கு மட்டும்..
நினைவு கொள்…
நிமிர்ந்து நில்..

24 January 2010

தேவதை


புல்வெளி நான்,
அதில் தூங்கும் பனித்துளி நான்
மழை துளி நான்,
அதில் நனையும் வானவில் நான்
ஆழ்கடல் நான்,
அதில் துயிலும் முத்து தரளங்கள் நான்
தென்றல் உலவும் சோலை நான்,
புயல் சுழலும் பாலையும் நான்.
மலைகள் சொரியும் நீர் வீழ்ச்சிகள் நான்,
பின் மெல்லென செல்லும் நதி மகள் நான்.
பசிய வயல் வெளி நான்,
அங்கு தலை சாயும் கதிர் தாங்கும் நிலமும் நான்
பூவிதழ் நான்,
பொன்னிலையும் நான்
இறைவன் பூமிக்கென்று அனுப்பிய
மெல்லிய தேவதை நான் இயற்கை...
செயற்கை கொண்டு வதைக்காதீர்
வலிக்கிறது

22 January 2010

வார்த்தையிழந்து.....



காரை காடுகளே
நாரை கூட்டங்களே
சேதி கேளீரோ!!!!
அத்தை மகனில் ஆசை வைத்தேனே
அச்சச்சோ
வெக்கத்தில் கத்திரி மேட்டு
செம்மண்ணா சிவந்தேனே….
சேலையில் சில்லறை முடிப்பாய்
மனசில ஒளிச்சு வச்ச அதை அத்தானுக்கு.
சொல்ல கருத்த குயிலுக்கு
நெல்லு தூவி காத்திருந்தேனே…
கொண்டை சேவலின் கூவலில்
அதை சொல்ல கூதலில் விழித்தேனே..
சேராத சேதி வயல் கிணறு பாசியா படிய கண்டு
கருக்கலில் நான் வச்ச கருவாட்டு குழம்பு கொண்டு
உச்சி வெயிலில் வயல் காட்டு வரம்பளந்தேனே…
பட்டாம் பூச்சி பிடிச்சு தந்தவன் காணாது
படபடக்கும் நெஞ்சு தொலைந்த கதையை
கண் பார்த்து சொல்ல விளைகையில்
மண்ணில பதிஞ்ச கண்கள் மரத்து போயினவே
அத்தனை புலன்களையும் சேர்த்து கொண்டு..
வயல் காடு முதல் வண்டி மாடு வரை
அறிந்த காதல்
வார்த்தையிழந்த காற்றாகி கலந்தனவே…
வளவி கொண்ட கை கோர்க்க
வாராயோ நீயாகவே...

17 January 2010

யாரோவானவள்



சலித்து சலித்து தேடினாள்
அவள் நினைவு சூழலில்
சொந்தம் எனும் சங்கேத வார்த்தைக்காய்…
ஆனால் அவள் நினைவின் தொடக்கம்
எழுத்தறியாத ஒரு பேருந்து சந்திப்பில்
எச்சை அறிந்த பிச்சை கொண்ட ஆரம்பமாகவே
இன்று வரை….
உயிர் வலிகள் குலவும் பொழுதுகளில்
தரை வீழ்ந்த நிலவாக அவள் தனிமை…
வழியறியாத ஊரில் மொழியிழந்த அவள் வெறுமை...
மூங்கில்கள் இழந்த கீதங்களாய்
ஊமையான அவள் இரவுகள்…
காந்தங்கள் இழந்த கவர்ச்சியாய்
பற்றற்ற அவள் கனவுகள்…
மழையிரவில் தாயின் தழுவல்களின்
அடையாளங்கள் அனுமானங்களில் கூட இல்லை.
காய்ந்த இலைகளில் பந்தங்களின் தேய்ந்த சுவடுகள் இல்லை…
கார்கால குதூகல பசுமைகள் இல்லை
பசி அறிந்தவள், ருசி அறியவில்லை
வார்த்தைகள் அறிந்தவள், வார்த்தையாடல் அறியவில்லை
உடல் அறிந்தவள், வயது அறியவில்லை
பெண்மை அறிந்தவள், மென்மை அறியவில்லை..
புலம் பெயர்வோ புயல் மழையோ
புது வித சதி விதியோ
ஆரம்பமும் முடிவும் தெரியாத ஆலகால இருட்டில்
நிராகரிக்கப்பட்ட நிஜங்களை அறியாமல்
தனக்கு தானே யாரோவாகி போனாள்...

16 January 2010

காதல்



கொடி கம்பியில் ஒட்டி கொண்ட
துளி மழை போல அழகானது
பூ தழுவி சுகந்தம் சுமந்த
பூங்காற்று போல இதமானது
உரு கரைந்து ஒளி தரும் மெழுகு போல
வலியானது
கரு திறந்து உயிர் கொண்ட சிறு சிசு போல
புதிதானது
குருத்தோலையில் கரு கொண்ட கவி வரிகள்
போல பழமையானது
கல்லறையில் பூத்து கடவுள் காலடி சேராத
சிவந்த சின்ன மலர் போல அமைதியானது
சில்லறை சிதறல்கள் போல
ஆரவாரமானது
தரையில் பூத்த விண்மீன்கள் போல
அதிசயமானது
பாலை வன வழிப்போக்கனை
காத தூரம் கடக்க வைக்கும்
கானல் நீர் போல பொய்யானது
கண்ணீர்துளியில் கலந்த உப்பு போல்
மெய்யானது
சுவாசகுழாய் சென்றும் செங்குருதி கலக்காத
காற்று போல அதிருஷ்டமில்லாதது
அலை கரை மணல் வீடுகள் போல
நிஜமிழந்தது
போர் நேர சங்கொலி போல
வன்மையானது
மழை நேர குயிலிசை போல
மென்மையானது
காகித கப்பல்கள் போல கரை சேராதது
கலங்கரைகள் போல கரை சேர்ப்பது
பூமி உள் சுமக்கும் செங்கனல் போல
உறங்காதது
ஆதலினால் தான்
காதலிக்காதவனும் காயப்படாதவனும்
மனிதரில் இல்லை

12 January 2010

மனைவியானேன்


தாய் தந்த அழகு
தந்தை தந்த அறிவு
சுமந்து சென்றேன் மனைவியாய்
புக்ககத்துக்கு பல பொருட்களோடு
ஒரு பொருளாய்…
கண்ணாடிகளில் என் விம்பம் தேய்ந்து
திடீரென அதீத அழகு கொண்டேன்
அவனுக்கு பிடித்த பதார்த்தம் பரிமாற…
அடுப்படியில் ஒரு படிகமாயே ஆனேன்…
கைக்குட்டையிலிருந்து கழுத்து பட்டி வரை தந்து
கையசைத்து அலுவலக நாட்களில் விடை கொடுத்தேன்
மாலை வேளை சாலை பார்த்து
காத்திருந்தேன் ஈருருளியின் ஓரொலிக்காய்…
வெள்ளி கிழமை விரதம் இருந்தேன்
வரலட்சுமிக்கு காப்பு கட்டினேன்
மரபு வேலி சிறை கொண்ட பெண்ணானதால்
ஒரு படியிறங்கி தோற்றும் போனேன்
கை கோர்த்தவனால் அல்ல
கை கோர்த்து கொண்டதால்..
ஒரு வகுப்பு தவறாமல் நான்
வாங்கிய பட்டம் பெட்டகத்துக்குள்
கணவனின் பட்டம் நான்கு சட்டத்துக்குள்
சுவரில்….
தலைவலி காய்ச்சல் கொண்டாலும்
சமையல் முதல் சகலமும் நான் தான்
கொண்டவன் தலைவலி கொண்டால்
அமிர்தாஞ்சனம் தேய்த்து ஆவி பறக்கும்
கோப்பியும் இலகு ஆகாரமும்….
காலை பத்திரிகை முதல் எதிலும் முன்னுரிமை
அறியாமலே ஆண் கொள்ள
தொடர் நாடகத்தில் யாரோ ஒரு அபிக்காக
போராட தொடங்கினேன் எனக்குள்
அவளும் பெண்தானே…
சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
உயிர் கொண்டு
என் தனியறை கதவருகில் செத்து போனது..

11 January 2010

திசை தெரியாமல்


சருகுகளில் சலனங்களில்
காலடி தடங்கள் கேட்டு
ஆண்டாண்டாய் கதவு திறக்கும்
முதிய தாய்…
பாலாபிசேகம் எம்பெருமானுக்கு
வாயிலில் இல்லாமையில் பசித்திருக்கும்
இயலாத பக்தன்…
நூறு விண்ணப்பங்களின் பின்னும்
கிட்டாத வேலைக்கு மறுபடியும்
அஞ்சலில் விண்ணப்பிக்கும்
விக்கிரமாதித்த பட்டதாரி…
கதவுகளை அடைத்த காதலி
கனவுகளில் கை கோர்த்ததால்
கண்ணீர் சிறைக்குள் தவிக்கும்
ஒருதலை காதலன்…
ஆட்சி மாற்றம் இடைதேர்தல்
அரசாங்க பண சுரண்டல்
அரசியல் மறந்த அவஸ்தையில் அரசியல்வாதி…
கணக்கு பாடத்தில் மட்டும் பத்தை தாண்டாத
பரீட்சை விடைத்தாளை
மறைக்கும் முயற்சியில் பத்து வயது மாணவன்…
சல்லாப வேளையிலும் முன்னாள்
காதலியின் இமையசைவுகளின்
இம்சைகளுடன் சராசரி கணவன்…
ஊழிக்கால துரும்பாய் ஓராயிரம்
மானுட உள்ளங்கள் திசை தெரியாமல்…..

07 January 2010

மௌனம்


மொட்டு அகம் சுமந்த மௌனம்
மலரில் சுகந்தமானது
கரு வானம் கதிரிழந்த மௌனம்
மண் நனைந்த துளியானது
கவி கரம் கனிந்த மௌனம்
கவிதையாக தாள் நனைந்தது
ஆழ்கடல் வெண்சிப்பி சேமித்த மௌனம்
முத்தாக கடல் கவர்ந்தது
கருங்குயிலின் இலையுதிர் கால மௌனம்
வசந்தத்தில் கீதமாகியது
உறங்கிய விழிகளின் மௌனம்
கனவாகி காட்சியானது
இயலாமை கொண்ட மௌனம்
ஏழ்மையில் பசியாகியது
இதய இடுக்குகளில் காதல் கருக்கொண்ட மௌனம்
மட்டும்
வார்த்தையின்றி மௌனமாகவே மௌனித்தது

05 January 2010

விவாகரத்து


என் கடல் பாதைகளில்
இல்லாத கலங்கரை நீ
என் புரியாத கவிதைகளில் தெரியாத
எழுத்து பிழை நீ
என் குருட்டு விழிகளில் ஜனிக்கின்ற
இருட்டு கனவுகள் நீ
என் விழிகள் சுமக்கின்ற
உப்பு தரளங்கள் நீ
என் வயல் நிலங்களில் நின்று போன
பருவ மழை நீ
என் கட்டிலில் காணாமல்போன
ஒற்றை தலையணை நீ
என் பாதைகளில் தேய்ந்து போன
காலடி தடயங்கள் நீ
என் விடியல்கள் மறந்து போன இதமான
முத்தங்கள் நீ
என் புது குங்கும கலயம் அறியாத
செந்நிறம் நீ
என் வாழ்வில் உன் பாதியை ரத்தாக்கிய
ஒற்றை கையொப்பம் நீ

மார்க்கண்டேயன்



வெண்மை நாணிய தண் மலர் ஒன்று
பாலனவனின் கையில் இருந்து
இமை சிறகுகள் விடை பெற்ற வினாடிக்குள்
செஞ்சூரிய வண்ணம் பூசி மண் கவிழ்ந்தது
காலனவனின் பாசக்கயிறு
எறிகணைகளாகியதால்
மலருக்கு புது நிற பதிப்பு
மலர் சுமந்த சின்னவன்
மார்க்கண்டேயனின் மறுபதிப்பு இல்லையே????
மண் கவிழ்ந்தான் மலரை போலவே
புன்னகை இழந்த புது சிவப்புடன்...